" alt="" aria-hidden="true" />
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.47 லட்சத்தை தாண்டியது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,380 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 295 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 1578 பேருக்கு தொற்று பாதிப்புடன் 2ம் இடத்தில் உள்ளது. 32 பேர் உயிரிழந்து, 40 பேர் குணமடைந்துள்ளனர். இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம் முதல் 3-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் பெயர்களை எந்த மாநில அரசும் வெளியிடுவதில்லை, அதே போன்று குணமடைந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் போது முழு உடல் கவசம் அணிந்த உடையை அணிந்தபடியே வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் வீடியோக்கள் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 180 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் போது எடுக்கப்படும் வீடியோக்கள் பார்க்கும் போது மிகுந்து அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மூலம் பரவுவதை சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவோரின் அடையாளத்தை வெளிபடுத்தும் வகையில் இவர்களின் வீடியோக்கள் வெளிவருவது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணம் அடைந்தாலும், அவருடன் தொடர்ந்து பழக மக்கள் அச்சம் அடைவார்கள். ஆகவே அரசின் சார்பில் குணமடைந்து வீடு திரும்புவோரின் வீடியோக்களை வெளியிடும் போது முழு கவசம் அடைந்த உடையை அணிந்த வீடியோ வெளியிட வேண்டுமென தமிழக சுகாதாரத்துறையும், அரசையும் தமிழ்நாடுமுஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். என்று கூறி உள்ளார்.